செய்திகள்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் தங்கமணி

அமைச்சர் தங்கமணியுடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வாய்ப்பு

Published On 2020-07-08 07:47 GMT   |   Update On 2020-07-08 07:47 GMT
அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்கமணி பங்கேற்றார்.  தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன் செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளம், TNPFCL என்ற கைப்பேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், அமைச்சர் தங்கமணி ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார்.

முதலமைச்சரை மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அமைச்சர் தங்கமணி கலந்து கொள்ளவில்லை. நாமக்கல்லில் உள்ள அமைச்சர் தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றுள்ளார். முதலமைச்சருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதால், முதலமைச்சருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த மாதம் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News