செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரம்- தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-07-08 06:46 GMT   |   Update On 2020-07-08 06:46 GMT
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும் விதம், அடக்கம் செய்யும் நடைமுறைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (வயது 55) கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் டி.பி.சத்திரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. 

அங்கும் எதிர்ப்பு கிளம்பியது. மருத்துவரின் உடலை புதைக்க வந்தவர்களை கல், கட்டையால் சிலர் தாக்கினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கி, ஆம்புலன்ஸ் வாகனத்தையும் சேதப்படுத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்திவருகிறது. 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. உடல் அடக்கம் தொடர்பாக ஐசிஎம்ஆர் வகுத்துள்ள விதிமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News