செய்திகள்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப்பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானப்பணிகளை விரைவில் முடிக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2020-07-08 01:34 GMT   |   Update On 2020-07-08 01:34 GMT
ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கட்டுமானங்கள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஜெயலலிதா நினைவு மண்டபம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளன.

துபாயில் இருந்து வந்திருந்த கட்டிடக்கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி பீனிக்ஸ் பறவையின் ஒரு இறக்கை அமைக்கப்பட்டு உள்ளது. மற்றொரு இறக்கைக்கு ஓரிரு நாட்களில் கான்கிரீட் போடப்பட உள்ளது. வடநாட்டு பணியாளர்கள் சென்றுவிட்டதால் தற்போது இந்தப்பணியில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தற்போது வரை 95 சதவீதமான பணிகள் நிறைவடைந்து உள்ளன. 2 மாதத்தில் அதாவது செப்டம்பரில் பணியை நிறைவு செய்து நினைவிடத்தை அரசிடம் ஒப்படைப்போம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க டெல்லியில் இருந்து முக்கிய தலைவர்களை அழைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News