செய்திகள்
கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்

முழு ஊரடங்குக்கு மத்தியிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்- சப்-கலெக்டர் ஆய்வு

Published On 2020-07-06 13:26 GMT   |   Update On 2020-07-06 13:26 GMT
முழு ஊரடங்குக்கு மத்தியிலும் பொள்ளாச்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இந்த பணியை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி:

கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி பொள்ளாச்சி நகரில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை சப்-கலெக்டர் வைத்திநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் பணியை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் தணிகவேல், நகராட்சி கமிஷனர் காந்திராஜ், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் புருஷோத்தமன், சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், சீனிவாசன், விஜய் ஆனந்த் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

முழு ஊரடங்கை பயன்படுத்தி பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், தேர்நிலை மார்க்கெட், காந்தி மார்க்கெட், கடை வீதி, நியூஸ்கீம் ரோடு, திரு.வி.க. மார்க்கெட், கோவை ரோடு, சத்திரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நகராட்சி மூலம் 3 வாகனங்கள், தீயணைப்பு துறை மூலம் 2 வாகனங்கள் மூலமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த பணியில் தீயணைப்பு துறையினர் உள்பட 15 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதை தவிர தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News