செய்திகள்
கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

முழு ஊரடங்கு அமல் - திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

Published On 2020-07-06 09:41 GMT   |   Update On 2020-07-06 09:41 GMT
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நேற்று நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் 6-வது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, கீழ்வேளூர், நாகூர், தரங்கம்பாடி, பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

நாகையில் கடைத்தெரு, நீலா வீதி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூரில் பெரிய கடைத்தெரு, நியூ பஜார் ஆகிய இடங்களில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள் மூடப்பட்டதால் பணி நிமித்தமாக நாகை பகுதிகளில் தங்கி உள்ள வெளியூர்களை சேர்ந்தவர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

முழு ஊரடங்கை மீறி நாகையில் 4 கடைகள், சீர்காழியில் 2 கடைகள், வேதாரண்யத்தில் 1 கடை என 7 கடைகளை திறந்து வைத்திருந்தது போலீசாரின் கண்காணிப்பு பணியின்போது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நாகை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் பகுதியில் உள்ள கடைகள், கச்சனம் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்குகளும் திறக்கப்படவில்லை. பாலையூர், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தென்பாதி கடைவீதி, கொள்ளிடம், முக்கூட்டு, தாடாளன் கோவில், ஈசானிய தெரு, ரெயில்வே ரோடு, கோவில்பத்து, சிதம்பரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சீர்காழி பகுதியில் சாலையில் தேவையின்றி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றத்திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் வைத்தீஸ்வரன்கோவில் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

தரங்கம்பாடி, பொறையாறு, செம்பனார்கோவில், ஆக்கூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தரங்கம்பாடி, சந்திரபாடி, குட்டியாண்டியூர், சின்னங்குடி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இந்த பகுதிகளில் மீனவர்கள் தங்களுடைய வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட எல்லையான பொறையாறு நண்டலாறு சோதனை சாவடி, காரைக்கால் மாவட்ட எல்லை ஆரம்ப பகுதியான பூவம் சோதனை சாவடியில் முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம், குரவப்புலம், தென்னம்புலம், செம்போடை, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட 30 ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. உப்பு ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், உப்பு ஏற்ற வந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் கடைவீதியில் மளிகை, காய்கறி உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் எந்த நேரத்திலும் பரபரப்பாக காணப்படும் திருவாரூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. விடுமுறை தினம் என்றால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த கடைகளும் அடைக்கப்பட்டதால் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் வேதனையடைந்தனர்.

கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். அனைத்து சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி காணப்பட்டது.

மேலும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்திட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியில் சுற்றுப்பவர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News