செய்திகள்
தேர்வு

காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் - தேர்வுத்துறை

Published On 2020-07-05 11:37 GMT   |   Update On 2020-07-05 11:58 GMT
பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால், ஆப்சென்ட் அளிக்க வேண்டும் என தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

கொரோனா பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையிலும், நடைமுறைத் தேர்வு மற்றும் வருகைப் பதிவு அடிப்படையிலும் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு வராத மாணவர்களை எவ்வாறு தேர்வு செய்வது என ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தாலும், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி மீண்டும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றில், காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதாத  மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டும் என தெரிவித்துள்ளார்.  மேலும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  

மேலும் மாணவர்கள் பாடவாரியாக பெறப்பட்ட விடைத்தாள் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எதற்காக வெளியானது என்ற தகவல் வெளியிடப்படாததால், இது ஆசிரியர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News