செய்திகள்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே

எந்தவித தளர்வுகளும் இல்லாமல் குமரியில் நாளை முழு ஊரடங்கு- கலெக்டர் பிரசாந்த் வடநேரே

Published On 2020-07-04 15:44 GMT   |   Update On 2020-07-04 15:44 GMT
எந்தவித தளர்வுகளும் இல்லாமல் குமரியில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றும், பாலகங்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்றும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:

தமிழகத்தில் தொடர் ஊரடங்கின் அடுத்த கட்டமாக ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மாதம் (ஜூலை) அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 12, 19, 26-ந் தேதிகளிலும் தமிழகத்தில் எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

அதன்படி முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த மாதம் 5, 12, 19, 26-ந் தேதிகளில், அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அறிவித்தபடி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் குமரி மாவட்டத்தில் அமல்படுத்தப்படும். பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து முழு ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும். காய்கறி கடைகளும், மளிகை கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும். பால் கடைகள், ஆவின் பாலகங்கள், மருந்துக்கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும்.

மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் மாவட்டப் பகுதிகளுக்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்றுவர வேண்டும். அதற்கும் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
Tags:    

Similar News