செய்திகள்
கோவையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டபோது எடுத்த படம்.

கொரோனாவால் இறந்தவரின் உடல் பாதுகாப்புடன் அடக்கம்

Published On 2020-07-04 06:20 GMT   |   Update On 2020-07-04 06:20 GMT
கொரோனாவால் இறந்தவரின் உடல் பாதுகாப்புடன் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது.
கோவை:

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை கவுரவமாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குப்பையை தூக்கி வீசுவது போலவும், குழியில் உருட்டி விடுவது போலவும், பொக்லைன் எந்திரத்தில் தூக்கி வந்து குழியில் போடுவது போலவும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதற்கு சுப்ரீம் கோர்ட்டு வருத்தம் தெரிவித்ததோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் மாநில அரசுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களில் வைரஸ் உயிருடன் இருக்கும் என்பதால் இறந்தவர்களின் உடல்களை தொடுவதற்கு அனுமதி இல்லை. அதனால் உடல்களுக்கு சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்வதற்கும், குளிப்பாட்டுவதற்கும் அனுமதி கிடையாது. உடல்களை அடக்கம் செய்யும் பணியாளர்கள் அனைவரும் முழு கவச உடை அணிந்து உடலை தொடாமல் அடக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வழிமுறைகளை அளித்துள்ளது. அடக்கம் செய்பவர்களின் உடல்களை ஆழமாக குழி தோண்டி அதில் பிளிச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் தகனம் செய்யப்படுபவர்களாக இருந்தால் அந்த உடலின் சாம்பலை யாருக்கும் கொடுக்கக்கூடாது என்றும் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக உடலை குழிக்குள் வைக்கும் போது மிகுந்த மரியாதையோடு இறக்கி வைக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. குழியில் உடலை வைப்பதில் தான் பெரும்பாலானவர்கள் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 63 வயது ஜவுளி வியாபாரி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் பெற்று கோவையில் அடக்கம் செய்தனர்.

இதற்காக 12 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. அதில் பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இறந்தவரின் உடலை ஆம்புலன்சில் இருந்து ஸ்டிரெச்சரில் இருந்து குறுக்கும், நெடுக்குமாக விரிக்கப்பட்ட நீளமான துணியில் இறக்கி வைக்கப்பட்டது. துணியில் வைக்கப்பட்ட உடலை நான்கு பக்கமும் நின்று உடலை தரையில் படாதவாறு இழுத்து பிடித்தவாறு குழி அருகில் தூக்கி வந்தனர். அதன் பின்னர் உடலை நீளவாக்கில் குழியில் பொறுமையாக இறக்கி நல்லடக்கம் செய்தனர்.

இந்த பணியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் 10 பேர் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News