செய்திகள்
கொரோனா பீதியால் திருமணம் நடந்த இடம் ஆட்கள் இல்லாமல் காணப்பட்டதை காணலாம்

மணப்பெண் தாயாருக்கு கொரோனா- அதிகாரிகள் பாதியில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு

Published On 2020-07-03 14:44 GMT   |   Update On 2020-07-03 14:44 GMT
நாகர்கோவிலில் நடந்த திருமணத்தில் பங்கேற்ற மணப்பெண் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரை அதிகாரிகள் பாதியில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று நாகர்கோவிலில் திருமணம் நடந்தது.

இதற்காக பெண் வீட்டார் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். அவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனையில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று காலை நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள மணமகன் வீட்டில் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வாழ்த்தி விருந்து உண்டு சென்றனர்.

இந்த நிலையில் மதியம் மணப்பெண் வீட்டாருக்கு ஆரல்வாய்மொழியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைக்கான முடிவுகள் வந்தது. இதில் மணப்பெண்ணின் 41 வயது தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை தலைமையிலான பணியாளர்கள் வடிவீஸ்வரம் பகுதிக்குச் சென்று திருமணம் நடந்த வீட்டில் இருந்த மணப்பெண்ணின் தாயாரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமண விருந்து முடிந்தும், முடியாமலும் இருக்கும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மணப்பெண்ணின் தாயாரை பாதியிலேயே சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற சம்பவம் திருமண வீட்டில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. மணமக்களும் கலக்கம் அடைந்தனர்.மேலும் திருமண வீட்டுக்கு வந்து, சென்றவர்கள் பட்டியலை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதில் 45 பெயர் விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இதில் சிலர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை பற்றிய விவரங்களை குமரி மாவட்ட அதிகாரிகள் விருதுநகர் மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். மணமக்கள், அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரையும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 5 நாட்கள் கழித்து அவர்களிடம் சளி மாதிரிகளை சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பின்னர் திருமணம் நடந்த வீட்டுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டது. அதே சமயத்தில், அந்த வீடு அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News