செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விஷவாயு தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்- முதலமைச்சர் உத்தரவு

Published On 2020-07-03 07:28 GMT   |   Update On 2020-07-03 07:28 GMT
தூத்துக்குடி அருகே வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65). இவருடைய வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பியதால், அதனை சுத்தம் செய்ய முடிவு செய்தார். இதனால் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் வாகனத்தை வரவழைத்தார். அதன்படி கழிவுநீர் வாகனத்துடன் தொழிலாளர்கள் நேற்று மதியம் அங்கு வந்தனர்.

இந்த பணியில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி (41), பாலா (20), மணிகண்டன் மகன் இசக்கிராஜா, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ் (19) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அவர்கள் கழிவுநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை முதலில் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்தனர். தண்ணீர் முழுவதும் எடுக்கப்பட்ட பிறகு தொட்டியின் அடியில் படிந்து இருந்த கழிவுகளை அகற்றுவதற்காக தொட்டியின் மேல் உள்ள சிறிய பாதை மூலம் இசக்கிராஜா, தினேஷ் ஆகியோர் உள்ளே இறங்கினார்கள்.

அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் விஷவாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தார்கள். இதை பார்த்து தொட்டியின் மேல் நின்ற பாலா அவர்களை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கினார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதை கவனித்த பாண்டி 3 பேரையும் காப்பாற்றுவதற்கு உள்ளே இறங்கினார். ஆனால், அவரும் விஷவாயு தாக்கி மயங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்த 4 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் 4 பேருமே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தட்டப்பாறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News