செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு- எடப்பாடி பழனிசாமி கடிதம்

Published On 2020-07-03 03:05 GMT   |   Update On 2020-07-03 03:05 GMT
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக 5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு விடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர செய்ய முடிவெடுத்துள்ளன.

சமீபத்தில் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது, பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது ‘ரகூட்டன் கிரிம்ஸன் ஹவுஸ்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஹிரோஷி மிகிடனி, ‘பி2டபிள்யு’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மரிகோ குரூஸ் மெய்ல்லஸ், ‘சீ லிமிடெட்’ (ஷாப்பீ) நிறுவனத்தின் தலைவர் மற்றும் குழு முதன்மைச் செயல் அலுவலர் பாரஸ்ட் லீ, ‘க்யூஓஓ10 பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஹூ யங்க் பே, ‘ஷாலண்டோ எஸ்இ ஹெட்குவாட்டர்’ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ரோபர்ட் ஜென்ட்ஸ் ஆகிய 5 முன்னணி மின்னணு வணிக (இகாமர்ஸ்) நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News