செய்திகள்
கலெக்டர் சந்தீப் நந்தூரி

ஆஸ்பத்திரிகளுக்கு சளி, காய்ச்சலுடன் வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்- கலெக்டர் தகவல்

Published On 2020-07-02 11:52 GMT   |   Update On 2020-07-02 11:52 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சளி, இருமல், காய்ச்சலுடன் வருபவர்கள் குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வீடு தோறும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூகஇடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டுதல்படி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதால் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ சிகிச்சையகங்களுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆகையால் அந்த நோயாளிகளின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு 93852 51239 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலோ அல்லது dailyupdateformatclinics@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களை முறையாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்காத தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ சிகிச்சையக நிர்வாகிகள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம்-2005 மற்றும் தொற்று பரவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News