செய்திகள்
டீக்கடையில் சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் டீ குடித்தபோது எடுத்த படம்.

நெல்லை மாநகர் பகுதியில் 3 மணி நேரம் மட்டுமே இயங்கிய டீக்கடைகள்

Published On 2020-07-02 11:07 GMT   |   Update On 2020-07-02 11:07 GMT
நெல்லை மாநகர் பகுதியில் நேற்று 3 மணி நேரம் மட்டுமே டீக்கடைகள் இயங்கின.
நெல்லை:

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கும், தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அப்போது பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. டீக்கடைகள், ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர் ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. டீக்கடைகளில் டீ விற்பனை செய்யக்கூடாது பார்சல் மட்டும் வழங்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதையடுத்து டீக்கடைகளில் டீ விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டீக்கடைகள் மக்கள் அதிக அளவில் கூட்டம் கூடுவதாலும், சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படாததாலும் தான் கொரோனா தொற்று அதிகரிக்கிறது என டீக்கடைகளில் மக்கள் கூடுவதை தடுக்க காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே டீ விற்பனை செய்யவேண்டும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று முதல் நெல்லை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே இயங்கின. நெல்லை மாநகராட்சி பகுதியில் காலை 6 மணிக்கு டீக்கடைகள் திறக்கப்பட்டு, 9 மணிக்கு அடைக்கப்பட்டன. பெரிய ஓட்டல்களிலும் டீ விற்பனை 9 மணி வரை மட்டுமே நடந்தன. இந்த கடைகளில் குறைந்த அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

நெல்லை மாநகர பகுதியில் 300-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் காலை 6 மணி முதல் 9 மணி மட்டுமே டீ விற்பனை செய்ய அனுமதி என்பதால் 100 கடைகள் மட்டுமே இந்த 3 மணி நேரம் மட்டும் இயங்கின. மற்ற கடைகள் டீ மாஸ்டருக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதால் இந்த 3 மணி நேரத்திற்காக 200-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. டீக்கடைகளை முழு நேரமும் திறந்து விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கடை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News