செய்திகள்
சத்குரு

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை தேசமே பாராட்டுகிறது- மருத்துவர்கள் தின வாழ்த்து செய்தியில் சத்குரு பெருமிதம்

Published On 2020-06-30 08:33 GMT   |   Update On 2020-06-30 08:33 GMT
‘கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த இக்கட்டான சூழலில் மருத்துவர்கள் ஆற்றிவரும் தன்னலமற்ற சேவையை ஒட்டுமொத்த தேசமே பாராட்டுகிறது’ என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
கோவை:

இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் நாளை (ஜூலை 1) அனுசரிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

படைத்தல் செயலில் இந்த உயிர் என்பது தனித்துவமும், அற்புதமானதாகவும் இருக்கிறது. இந்த பூமியில் உயிர் பல வடிவங்களை   எடுத்திருந்தாலும்,  பரிணாம வளர்ச்சியின் உச்சபட்ச சாத்தியமாக மனித உயிர் வளர்ந்திருக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க மனித உயிர்களை பாதுகாத்து  நலமாக வைத்து கொள்ளத் தேவையான அறிவும், சாத்தியமும் மருத்துவர்களாகிய உங்களின் கரங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் மிகப்பெரிய உரிமையாகும்.

குறிப்பாக, வைரஸ் பாதிப்பு மிகுந்த இந்த இக்கட்டான சூழலில் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, இறப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலையற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது. இந்த சமயத்தில் நீங்கள் (மருத்துவர்கள்) முக்கியமானவர்களாக பார்க்கப்படுகிறீர்கள். ஒவ்வொருவரும் உயிருடன் இருப்பதும், இறப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது.

நீங்கள் உங்களது தனிப்பட்ட நலனை விட மக்களின்  நலனில் அதிக அக்கறையுடன் சேவையாற்றி வருகிறீர்கள். அதற்காக, உங்கள் தனிப்பட்ட சுகங்களையும், வசதிகளையும் தியாகம் செய்கிறீர்கள்.  உங்களின்  இந்த தன்னலமற்ற  குணம் மிகுந்த போற்றுதலுக்குரியது. மற்ற எல்லாவற்றையும் விட, மருத்துவத் துறையில் இருப்பவர்கள் செய்யும் சேவைகளையே  இப்போது தேசம் மிகவும் பாராட்டுகிறது. ஒரு விதத்தில் இந்த பாராட்டு உங்களுக்கு நிச்சயம் வலுச் சேர்க்கும்.  

இந்த தேசிய மருத்துவர்கள் தினத்தில் மனித உயிர்களை காக்கும் உங்கள் தன்னலமற்ற தன்மையை மேலும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். உங்களது இந்த தன்னலமற்ற தன்மை நிச்சயமாக தேசத்தில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.  இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தடுப்பு களப் பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினரின் நலனை கருத்தில் கொண்டு ஈஷா யோகா வகுப்பு அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இவ்வகுப்பில் பங்கேற்க http://tamil.sadhguru.org/IYO என்ற இணைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News