செய்திகள்
வெளியான சிசிடிவி கேமரா காட்சிகள்.

சாத்தான்குளத்தில் நடந்தது என்ன?- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வெளியானதால் பரபரப்பு

Published On 2020-06-30 02:23 GMT   |   Update On 2020-06-30 02:23 GMT
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, சம்பவத்தன்று நிகழ்ந்தது என்ன? என்பது தொடர்பாக, செல்போன் கடையின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் முழுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையே, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், அவர்கள் 2 பேரும் ஊரடங்கை மீறி இரவு 9 மணியை கடந்தும், தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாகவும், இரவு 9.15 மணி அளவில் அங்கு சென்ற போலீசார், கடையை மூடுமாறு கூறியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தையும், மகனும் சேர்ந்து போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தும், தரையில் தாங்களாகவே புரண்டு தகராறு செய்ததில் காயம் ஏற்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு மாறாக, ஜெயராஜின் பக்கத்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் நேற்று ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த காட்சியில், போலீசார் அழைத்ததும் செல்போன் கடை அருகில் இருந்து ஜெயராஜ் போலீஸ் வாகனத்தை நோக்கி செல்வதும், தொடர்ந்து சிறிது நேரத்தில் தனது தந்தையை போலீசார் அழைத்து செல்வதை அறிந்து பென்னிக்ஸ் கடையில் இருந்து வெளியே வருவதும், பின்னர் அவர் கடையை பூட்டி விட்டு, நண்பருடன் மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டு செல்வதும் பதிவாகி இருந்தது.

மேலும், அப்போது பக்கத்து கடைகள் திறந்து இருந்ததும், செல்போன் கடை முன்பு கூட்டமும், எந்தவித தகராறும் நடைபெறவில்லை என்பதும் பதிவாகி உள்ளது. இது போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு மாறாக வெளியான சி.சி.டி.வி. கேமரா காட்சி இந்த வழக்கில் திடீர் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News