செய்திகள்
குழந்தை - கோப்புப்படம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 13 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்தது

Published On 2020-06-29 14:20 GMT   |   Update On 2020-06-29 14:20 GMT
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 23 கர்ப்பிணிகளில், 13 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை நலமுடன் பிறந்தது.
சேலம்:

கொரோனா தொற்றில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 மாதங்களாக பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து டீன் பாலாஜிநாதன் கூறும்போது, ஊரடங்கு உத்தரவு காலத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 868 குழந்தைகளும், ஏப்ரலில் 977 குழந்தைகளும், மே மாதத்தில் 1,082 குழந்தைகளும் பிறந்துள்ளன. மேலும் இந்திய குடும்ப நல அமைச்சகம், தேசிய தர பிரசவ மற்றும் குழந்தைகள் பராமரிப்பு துறை குழு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்து மிகச்சிறந்த முறையில் பிரசவம் பார்ப்பதால் பிளாட்டினம் சான்றிதழ் வழங்கி உள்ளது. கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு பிரசவம் பார்க்கப்பட்டது. கொரோனா அறிகுறி இருப்பின் அவர்களுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு 4 டாக்டர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆஸ்பத்திரியில் கொரோனாவால் 23 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது. மேலும் கொரோனோ கர்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை அளிக்கப்படுகிறது, என்றார்.
Tags:    

Similar News