செய்திகள்
ப.சிதம்பரம்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது -ப.சிதம்பரம்

Published On 2020-06-29 03:52 GMT   |   Update On 2020-06-29 03:52 GMT
காவலில் வைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
சென்னை:

சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் மரணம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தமிழக முதல்வர் கூறி உள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த முடிவை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது.

1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில் காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை.

சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தந்தை மகன் மரணத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தந்தை, மகன் மரணத்திற்கு காரணமான போலீசார் உள்ளிட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Tags:    

Similar News