செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் : முதல்வர் பழனிசாமி இரங்கல் - தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Published On 2020-06-24 12:13 GMT   |   Update On 2020-06-24 12:13 GMT
கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை:

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி அவர்களை கைது செய்த சாத்தான்குளம் போலீசார், காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் மரணம் அடைந்ததாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காணொலி மூலம் இன்று மதியம் 12.30 மணிக்கு தமிழக டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.  மேலும் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தனது இரங்கல் செய்தியில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்தது தொடர்பாக நீதித்துறை நடுவர் பிரேத புலன்விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்,   நீதித்துறை நடுவரின் அறிக்கை, உயர்நீதிமன்ற கிளை பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.  

ஜெயராஜ், பென்னிக்ஸ்  உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எஸ்.ஐ.க்கள், தலைமைக் காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. கூறியதாக முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.  
Tags:    

Similar News