செய்திகள்
டிக்டாக் சூர்யா

டிக்-டாக்கில் பிரபலமான பெண் தற்கொலை முயற்சி

Published On 2020-06-23 01:34 GMT   |   Update On 2020-06-23 01:34 GMT
தனிமைப்படுத்தப்பட்டவர் வீடு என்று நோட்டீசு ஒட்டப்பட்டதால், டிக்-டாக் மூலம் பிரபலமான பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது35). இவர் சமூக வலைத்தளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சிங்கப்பூரில் இருந்து சூர்யா கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்து திருப்பூருக்கு வந்தார். சிங்கப்பூரில் இருந்து சூர்யா வந்ததால், அவர் குடியிருக்கும் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதனால் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீரபாண்டி போலீசாருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து அதிகாரிகள் சூர்யாவை அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதற்கிடையில் பூண்டியை சேர்ந்த ஒருவருக்கு டிக்டாக்கில் கொலை மிரட்டல் விடுத்து, அவதூறு பரப்பியதாக சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சூர்யா, அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு, நேற்று காலை 8 மணிக்கு கதவை சாத்திக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, சூர்யாவை காப்பாற்ற அவருடைய வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு சாத்தப்பட்டு இருந்த கதவை தள்ளியபோது, வீட்டினுள் ஒரு கயிற்றில் தூக்கில் தொங்க சூர்யா முயன்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆம்புலன்சில் அவர் ஏற மறுத்து அடம் பிடித்ததோடு, ரோட்டில் உருண்டு புரண்டார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து திருப்பூர் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தபின்னர், கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முன்னதாக அவர் டிக்-டாக்கில் ஒரு பதிவிட்டு இருந்தார். அதில் பெத்தவளும் சரியில்லை. வாய்த்தவனும் சரியில்லை. வாழ்க்கை கொடுக்க வருபவனும் நிரந்தரமில்லை என்று பதிவிட்டு இருந்தார்.
Tags:    

Similar News