செய்திகள்
தேர்வு

10-ம் வகுப்பு காலாண்டு விடைத்தாள்கள் மாயம்?- தேர்வு எழுத வைத்ததாக பரபரப்பு

Published On 2020-06-20 11:43 GMT   |   Update On 2020-06-20 11:43 GMT
மத்தூர் அரசு பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு காலாண்டு விடைத்தாள்கள் மாயமானதாகவும், மாணவிகளை வரவழைத்து மீண்டும் தேர்வு எழுத வைத்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்:

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை கணக்கீடு செய்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வின் விடைத்தாள்கள் மாயமானதாக தெரிகிறது. இதனால் பள்ளி சார்பில் மாணவிகளை மீண்டும் வரவழைத்து தேர்வு எழுத வைத்ததாக கூறப்படுகிறது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் தேவையில்லை என்றும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வித்துறை நேற்று அறிவித்த நிலையில் மாணவிகளை வரவழைத்து தேர்வு எழுதிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிகளின் பெற்றோரை மதிப்பெண் அட்டையில் கையொப்பம் இட மாணவிகளுடன் வருமாறு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பள்ளிக்கு வந்த 15-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தங்களது காலாண்டு விடைத்தாள் மாயமாகி விட்டதாலும் மீண்டும் தேர்வு எழுதுமாறும் தெரிவித்து அருகில் உள்ள தனியார் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள், அவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து இடவே வந்ததாகவும், தேர்வுகள் எழுதவில்லை என்றும் தெரிவித்தனர். எனினும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
Tags:    

Similar News