செய்திகள்
சென்னை ஐகோர்ட்

வந்தே பாரத் திட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுமா? -மத்திய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-06-19 09:14 GMT   |   Update On 2020-06-19 09:14 GMT
வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து வருவதற்கு கூடுதல் விமானங்கள் இயக்கம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த திட்டத்தின்கீழ் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் திமுக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் விமானங்கள் இயக்க தமிழக அரசு. தடை விதித்துள்ளதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகர்கள் உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதமாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் விவரங்கள், இதுவரை இந்தியாவிலும், தமிழகத்திலும் இயக்கப்பட்ட விமானங்கள் எத்தனை? சிக்கியுள்ள மீதமுள்ளவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர். மேலும், பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் குறித்து கேட்ட நீதிபதிகள், இந்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.



அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இதுவரை 14065 தமிழர்கள் அழைத்து வரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 40433 பேர் தமிழகம் திரும்ப பதிவு செய்திருப்பதாகவும், அழைத்து வரப்பட்டவர்கள் போக மீதமுள்ள 26368 பேரை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழர்களை மீட்டு வர எத்தனை விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பது குறித்தும், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு, டிக்கெட் கட்டணம் வழங்கியது தொடர்பாக மத்திய அரசு தனது அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறிப்பிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கலாம் என்றும் அதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த முறை பிறப்பிக்கப்பட உத்தரவை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்தும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்த திட்டங்கள் பற்றியும் ஜூன் 23ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையையும் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News