செய்திகள்
முக்கொம்பு மேலணையை வந்தடைந்த தண்ணீரை அதிகாரிகள், விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்

காவிரி தண்ணீர் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது

Published On 2020-06-16 11:28 GMT   |   Update On 2020-06-16 11:28 GMT
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் நேற்று முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அப்போது தண்ணீர் மீது அதிகாரிகள்-விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.
ஜீயபுரம்:

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது மேட்டூர் அணை. வழக்கமாக ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி, கடந்த 12-ந் தேதி காலை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியும், பின்னர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் நேற்று முன்தினம் காலை 8.30 மணி அளவில் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையை வந்தடைந்தது. அங்கிருந்து அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டதால் அந்த நீர் முக்கொம்பு மேலணை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி மாயனூர் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரவில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.

இந்தநிலையில், நேற்று காலை திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாத்தலை பகுதிக்கு காலை 8 மணியளவில் தண்ணீர் வந்தடைந்தது. பின்னர் சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை வழியாக முக்கொம்பு மேலணைக்கு மதியம் வந்தடைந்தது. முக்கொம்பு மேலணையை காலை வந்தடையும் என்று எதிர்பார்த்து அதிகாரிகளும், விவசாயிகளும் காத்திருந்தனர்.

ஆனால், மதியம் 2 மணியளவில்தான் தண்ணீர் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அப்போது அங்கு தயாராக இருந்த அதிகாரிகளும், விவசாயிகளும் தண்ணீரில் இறங்கி பூஜைகள் செய்து, மலர்கள் மற்றும் தானியங்களை தூவி காவிரி தாயை வணங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கர் முக்கொம்பு மேலணையில் உள்ள 41 மதகுகளின் வழியாக தண்ணீரை திறந்து விட்டார். அந்த தண்ணீர் கல்லணை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. படிப்படியாக அதன் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தண்ணீர் மூலம் திருச்சி உள்பட 12 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News