செய்திகள்
யானை

காட்டுயானைகள் நடமாட்டம்: ஆழியாறு அணைக்கு குளிக்க செல்லக்கூடாது

Published On 2020-06-15 11:24 GMT   |   Update On 2020-06-15 11:24 GMT
காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால், ஆழியாறு அணைக்கு குளிக்க செல்லக்கூடாது என்று பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் காட்டுயானை, புலி, சிறுத்தைப்புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அந்த வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் இல்லாததால், வனவிலங்குகள் தாகம் தீர்க்க ஆழியாறு அணைக்கு வருகின்றன. தற்போது அணை பகுதிகளில் 2 குட்டிகளுடன் 4 காட்டுயானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆழியாறு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு பின் காட்டுயானை கூட்டம் முகாமிட்டு இருந்தது.

இதையடுத்து காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 8 மணிக்கு பிறகு காட்டுயானைகள் அங்கிருந்து ஆதாளியம்மன் கோவில் பகுதிக்கு சென்றது. தற்போது அதே பகுதியில் வனத்திற்குள் காட்டுயானைகள் நிற்கின்றன. மேலும் அவ்வப்போது வால்பாறை ரோட்டை கடந்து செல்கின்றன. இதன் காரணமாக வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வருகின்றனர். இதுகுறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறியதாவது:-

ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க 2 குட்டிகளுடன் வந்த காட்டுயானை கூட்டம் குரங்கு நீர்வீழ்ச்சி, ஆதாளியம்மன் கோவில், ஆழியாறு அணை பகுதியில் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். மாலை 6 மணிக்கு பிறகு இருசக்கர வாகனங்களில் வால்பாறைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காட்டுயானைகளை பார்த்தால், அவற்றை விரட்டுவதற்கு முயற்சி செய்யக்கூடாது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காட்டுயானைகளின் அருகில் சென்று செல்போனில் செல்பி புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மேலும் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால், ஆழியாறு அணைக்கு குளிக்க செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News