செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

Published On 2020-06-10 13:25 GMT   |   Update On 2020-06-10 13:25 GMT
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சேலம்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணை உத்தரவுபடி மாதந்தோறும் தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கும் விதமாக கடந்த 8-ந்தேதி முதல் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 300 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் காவிரியில் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லை கடந்து ஓரிரு நாளில் புதுவெள்ளம் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று 1451 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1439 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது.

அணையில் இருந்து குடிநீருக்காக காவிரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 101.70 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 101.71 அடியானது.

Tags:    

Similar News