செய்திகள்
சிறப்பு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் காட்சி.

ஹால் டிக்கெட் பெறும் மாணவர்களுக்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இன்று இயக்கம்

Published On 2020-06-08 03:27 GMT   |   Update On 2020-06-08 03:27 GMT
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ‘ஹால் டிக்கெட்’ பெறுவதற்கு ஏதுவாக 109 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
சென்னை:

மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கோ.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்க உள்ளது. தேர்வு எழுத மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் 8-ந்தேதி(இன்று) முதல் 13-ந்தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

இதனை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், மாநகர போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடங்களில் 109 சிறப்பு பஸ்கள் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பஸ்களில் மாணவர்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். ஆசிரியர்கள் பயணச்சீட்டு வாங்க வேண்டும். தவிர ஏனைய பிற பயணிகள் பஸ்களில் பயணம் செய்ய அனுமதி இல்லை.

இந்த சிறப்பு பஸ்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக பஸ்சின் முகப்பில் பள்ளி கல்வித்துறை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. காலை 9 மணியளவில் புறப்பட்டு, பின்னர் மாலை 4 மணிக்கு மறுமுனையில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளவாறு, இந்த பஸ்களில் பயணம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதோடு, தனிநபர் இடைவெளியினையும் பின்பற்றிடும் பொருட்டு, பஸ்களில் 24 பேர்(60 சதவீதம்) பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பஸ்களில் பின்புறமாக ஏறி, முன்புறமாக இறங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News