செய்திகள்
நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது எடுத்தபடம்.

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை - அமைச்சர் நிலோபர் கபில்

Published On 2020-06-07 10:22 GMT   |   Update On 2020-06-07 10:22 GMT
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பேசினார்.
தர்மபுரி:

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் பதிவு பெற்ற 2,135 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். தொழிலாளர் ஆணையர் நந்தகோபால், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

அப்போது அமைச்சர் நிலோபர் கபில் பேசியதாவது:-

கொரோனா பாதிப்பால் நலிவடைந்த கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 12 லட்சம் பேருக்கு அவர்களுடைய வங்கி கணக்கிற்கு தலா ரூ.2 ஆயிரம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அரிசி, உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மற்ற 15 வாரியங்களை சேர்ந்த 13 லட்சம் பேருக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு தலா ரூ.2ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெளிமாநில தொழிலாளர்கள் 2 லட்சத்து 15 ஆயிரம் பேரை அவர்களின் விருப்பபடி சொந்த ஊர்களுக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 177 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.29 கோடியே 43 லட்சத்து 54 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 17 வாரியங்களை சார்ந்த அனைத்து தொழிலாளர்களின் நலனிலும் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் செந்தில்குமாரி, சேலம் இணை ஆணையர் ரமேஷ், உதவி ஆணையர் இந்தியா, உதவி கலெக்டர் தணிகாசலம், நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவபிரகாசம் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News