செய்திகள்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா

மானியத்தில் சூரியசக்தி பம்பு செட்டுகள் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம் - கலெக்டர் சாந்தா தகவல்

Published On 2020-06-07 09:18 GMT   |   Update On 2020-06-07 09:18 GMT
விவசாயிகள் மானியத்தில் சூரியசக்தி பம்பு செட்டுகள் அமைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வேளாண்மையில் நீர் பாசனத்திற்கு தேவையான எரிசக்தியினை உறுதிசெய்யும் நோக்கத்துடன் 2013-14-ம் ஆண்டு முதல் சூரியசக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்துக்கொடுத்து வருகிறது. சூரிய சக்தி பம்புசெட்டுகள் மூலம் மின் இணைப்பு தேவையின்றி பகலில் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம் பெறமுடியும்.

மத்திய அரசு, பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடனும் மற்றும் தமிழக அரசின் 40 சதவீத மானியத்துடனும் ஆக மொத்தம் 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும். இத்திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையிலான மோட்டார் பம்பு செட்டுகளுக்கான (நீர்மூழ்கிபம்புசெட்டுகள் மற்றும் தரைமட்டத்தில் அமைக்கும் மோனோபிளாக் பம்புசெட்டுகள்) விலைநிர்ணயம் செய்தல் மற்றும் நிறுவனங்களைஅங்கீகரித்தல் ஆகியவை மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையுள்ள நீர்மூழ்கி பம்புசெட்டுகள் மற்றும் தரைமட்டத்தில் அமைக்கும் மோனோபிளாக் பம்புசெட்டுகள், இதுவரை மின் இணைப்பு பெறப்படாத நீர்ப்பாசனத்திற்கான ஆதாரங்களுக்கு விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும் போது சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மத கடிதத்தை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்கவேண்டும்.

இதுவரை இலவச மின் இணைப்புக்கோரி விண்ணப்பிக்காத விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தி பம்புசெட்டுகளை அமைத்திட, இலவச மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட விண்ணப்பம் அளிக்கும் போது, சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை நுண்ணீர் பாசனத்துடன் இணைத்திட உறுதிமொழி அளித்திடவேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பயன் பெற ஆர்வமுடைய விவசாயிகள் உடனடியாக பெரம்பலூர் வருவாய் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News