செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மதுரையில் ரெயில்வே ஊழியருக்கும் கொரோனா தொற்று அறிகுறி

Published On 2020-06-06 14:22 GMT   |   Update On 2020-06-06 14:22 GMT
மதுரை ரெயில்வே ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரை:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் நோயின் தாக்கம் தினமும் பெரும் எண்ணிக்கையிலேயே உள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது.

மேலஅனுப்பானடியை சேர்ந்த 72 வயது மூதாட்டி கொரோனா சிறப்பு வார்டில் பரிதாபமாக இறந்துள்ளார். ரத்த அழுத்தம், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் இறந்தார். இதன் மூலம் மதுரையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

துபாயில் இருந்து விமானத்தில் மதுரை வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த 20 வயது வாலிபருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். அவர் அங்கிருந்து மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதி முகவரியை கொடுத்திருந்ததால் நெல்லை சுகாதார பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரை ரெயில்வே ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

மதுரை ரெயில்வேயில் ரெயில் பெட்டிகளை பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் ஊழியரான அவருக்கு ரெயில்வே ஆஸ்பத்திரியில் சோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா உறுதியானதை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே உத்தரபிரதேசத்திற்கு சென்ற சிறப்பு ரெயிலில் மெக்கானிக்காக பணியாற்றிய 2 பேர் கொரோனா பாதிப்பில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இளம் தம்பதியர் சென்னையில் இருந்து கடந்த 3-ந்தேதி ஊர் திரும்பி இருந்தனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு நேற்று வெளியானது.

இதில் அந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதற்கிடையில் 2 நாட்கள் கிராமத்தில் தங்கி இருந்ததால் அங்கு மேலும் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக் கலாமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 169 பேர் கொரோனா பாதிப்பில் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிவரும் 58 வயது தாசில்தார் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News