செய்திகள்
பொதுத்தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: தென்காசியில் 17,446 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்

Published On 2020-06-06 08:37 GMT   |   Update On 2020-06-06 08:37 GMT
தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 17 ஆயிரத்து 446 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தென்காசி:

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் மார்ச் மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 தேர்வு வருகிற 16-ந்தேதியும், மார்ச் 24-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுத இயலாதவர்களுக்கு 18-ந்தேதியும் நடக்கின்றன. தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் பல்வேறு அரசு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் இந்த தேர்வுகள் சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் தென்காசி கல்வி மாவட்டத்தில் 107 தேர்வு மையங்களில் 10 ஆயிரத்து 129 மாணவ-மாணவிகளும், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 96 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 203 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்து 446 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகிறார்கள். இதேபோல் பிளஸ்-1 தேர்வை தென்காசி மாவட்டத்தில் 144 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 574 மாணவ-மாணவிகளும், பிளஸ்-2 தேர்வை 63 மையங்களில் 507 பேரும் எழுதுகிறார்கள்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த தேர்வு மையங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைத்து தேர்வு எழுத வசதி செய்யப்பட்டு உள்ளது. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 10 சிறப்பு தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதும் மையத்திலேயே தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு மையங்கள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டு, கழிப்பறைகள் மற்றும் தேர்வு அறைகளில் கிருமிநாசினி கொண்டு ஒவ்வொரு தேர்வு நாள் அன்றும் தேர்வுக்கு முன்னும், பின்னும் சுத்தம் செய்ய உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு அறைக்கு செல்லும்போதும், வெளியே செல்லும்போதும் கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முககவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் ஆசிரியர்கள் பணி நியமன ஆணை, அடையாள அட்டையுடன் இ-பாஸ் இல்லாமல் தேர்வு மையத்துக்கு வந்து செல்ல அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வு குறித்து தங்கள் சந்தேகங்களை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கேட்டு தெரிந்துகொள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் 9443620761, 9443621358 என்ற எண்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தீர்வு பெறலாம்.

இந்த தகவலை தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கருப்பசாமி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News