செய்திகள்
திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2020-06-05 14:16 GMT   |   Update On 2020-06-05 14:16 GMT
குமரி மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பல இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.

நாகர்கோவிலில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. மேலும் சாரல் மழை பொழிந்தது. கொட்டாரம், மயிலாடி, சாமிதோப்பு, தக்கலை, பூதப்பாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

மலையடிவார பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மழை காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பழையாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சப்பாத்து பாலம் மூழ்கியது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.90 அடியாக இருந்தது. அணைக்கு 573 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அதேபோல் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 45.85அடியாக இருந்தது. அணைக்கு 519 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

அதேபோல் சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 13.97 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 14.07 அடியாகவும் உள்ளது. இந்த இரு அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாலமோர்-21.2, சிற்றாறு 2-20, திற்பரப்பு-18.6, மயிலாடி-18.2, நாகர் கோவில்-17.8, பெருஞ்சாணி-16.8, நிலப்பாறை-16.2, மாம்பழத்துறையாறு-16, சிற்றாறு 1-15.8, ஆனைக்கிடங்கு-14, குருந்தன் கோடு-10.6, இரணியல்-8, பேச்சிப்பாறை-7.

Tags:    

Similar News