செய்திகள்
மைசூர் வெங்காயம்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வந்து இறங்கிய மைசூர் வெங்காயம்

Published On 2020-06-05 14:07 GMT   |   Update On 2020-06-05 14:07 GMT
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு மைசூரில் இருந்து 25 டன் அளவுக்கு பல்லாரி வெங்காயம் வந்து இறங்கியது. ஒரு கிலோ ரூ.13 என விற்பனையானது.
ஒட்டன்சத்திரம்:

கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு இன்று மைசூரில் இருந்து வெங்காயம் வந்து இறங்கியதால் விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது.

தென்தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் பல நகரங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வருவதில் சிரமம் இருந்தது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து அடியோடு நின்றது. கடந்த 1-ந்தேதி முதல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மைசூரில் இருந்து 25 டன் அளவுக்கு பல்லாரி வெங்காயம் வந்து இறங்கியது. ஒரு கிலோ ரூ.13 என விற்பனையானது. கடந்த வாரங்களில் வரத்து குறைவு காரணமாக ரூ.40 வரை விற்கப்பட்டது.

இதேபோல் சின்னவெங்காயமும் 5000 பை அளவுக்கு வந்து இறங்கியது. இதுவும் கடந்த வாரத்தை விட விலை குறைந்து விற்பனையானது. ஊரடங்கு தளர்வு காரணமாக ஓட்டல் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மேலும் வருகிற 8-ந்தேதி முதல் ஓட்டல் கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெங்காய விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் அதிகளவு வெங்காயம் வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News