செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம்

இயல்பு நிலைக்கு திரும்பியது குமரி மாவட்டம்- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2020-06-05 10:05 GMT   |   Update On 2020-06-05 10:05 GMT
கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் குமரி மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகர்கோவில்:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய- மாநில அரசுகள் கடந்த 2-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளித்தது.

அதன்படி ஒரு பஸ்சில் 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், டிரைவர், கண்டக்டர், பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் பஸ்சில் பயணம் செய்ய கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பொது போக்குவரத்து தொடங்கியதன் மூலம் குமரி மாவட்டத்தில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இதுதொடர்பாக குமரி மாவட்ட மக்கள் சிலரின் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

செண்பகராமன்புதூரை சேர்ந்த அகிலா:- நான் நாகர்கோவிலில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறேன். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தினமும் வேலைக்கு வர சிரமமாக இருந்தது. என் சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் தினமும் நாகர்கோவில் வந்து சென்றேன். இதனால் அதிகமாக செலவு ஏற்பட்டது. தற்போது பஸ் ஓட தொடங்கி இருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரத்தில் நோய் பாதிப்பை கருத்தில் கொண்டு அரசு கூறும் விதிகளை பின்பற்றி மக்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வது அவசியம்.

பார்வதிபுரத்தை சேர்ந்த யூஜின் வனஜா:- குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் ஓட தொடங்கி இருப்பது வரவேற்கதக்கது. குமரி மாவட்டத்தில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கிறார்கள். எனவே நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவுதான். எனினும் பஸ்சில் ஏறும் பயணிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய ஒரு பஸ்சில் கூடுதலாக ஒரு கண்டக்டர் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒரு பஸ்சில் 2 கண்டக்டர்கள் இருந்தால் ஒருவர் டிக்கெட் கொடுக்கும் வேலையை கவனித்துக் கொள்வார். மற்றொருவர் பயணிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய உதவியாக இருக்கும்.

வெள்ளமடத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் தியாகராஜன்:- மக்களுக்கு பொது போக்குவரத்து கட்டாயம் தேவை என்பதை கருத்தில் கொண்டு 2 மாத ஊரடங்குக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கிறது. இதுவரவேற்கத்தக்கது. ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது நோய் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கிறது. எனினும் பஸ் போக்குவரத்து கட்டாய தேவை. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இருளப்பபுரத்தை சேர்ந்த சாய்:- தமிழகத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் குறைவான பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லைக்கு செல்லும் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு கூட்டம் கூடுவதால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
Tags:    

Similar News