செய்திகள்
கொரோனா வைரஸ்

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-05 07:26 GMT   |   Update On 2020-06-05 07:26 GMT
தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் பள்ளி மாணவி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் உயிரிழந்தனர். 25 பேர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே காஞ்சிபுரத்தில் இருந்து கொடைக்கானல் வந்த 10-ம் வகுப்பு மாணவி, மகாராஷ்டிராவில் இருந்து வந்த தம்பதி உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொடைக்கானலுக்கு 10-ம் வகுப்பு தேர்வு ஹால்டிக்கெட் வாங்க வந்த மாணவி மற்றும் அவரது தாய், கார் டிரைவர் ஆகியோருக்கு சோதனை நடத்தப்பட்டதில் மாணவிக்கு மட்டும் தொற்றுஉறுதி செய்யப்பட்டது. அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மற்ற 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொடைக்கானலில் முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள சின்னகுளம் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், அவரது 25 வயது கர்ப்பிணி மனைவி, 60 வயது தந்தை ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து திரும்பி வந்தனர். அவர்கள் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் இலங்கையில் இருந்து சின்னாளபட்டிக்கு வந்த 40 வயது வாலிபர், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட கள்ளிமந்தயத்தை சேர்ந்த வியாபாரியின் 3 வயது பெண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து குச்சனூர் அருகில் உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்த 24 வயது வாலிபர், ஆண்டிப்பட்டி அருகே கோத்தலூத்து பகுதியை சேர்ந்த 43 வயது பெண், தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு குடல் இறக்க நோய்க்கு சிகிச்சை பெற வந்த கொண்டம நாயக்கன் பட்டியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர்.

தற்போது தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 16 பேர், கம்பம் அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை என மொத்தம் 17 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News