செய்திகள்
ரெயில்

‘டிக்கெட்’ ரத்து கட்டணத்தை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2020-06-05 03:49 GMT   |   Update On 2020-06-05 04:03 GMT
சென்னை கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரெயில் டிக்கெட் கட்டணத்தை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் ரெயில் சேவைகள் ஜூன் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் எப்போது கையில் கிடைக்கும் என்று பயணிகள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்தநிலையில் சென்னை கோட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் டிக்கெட் ரத்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் ஜூன் மாதம் 30-ந்தேதி வரையில் ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, மயிலாப்பூர், மாம்பலம், பரங்கிமலை, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய 19 ரெயில் நிலையங்களில் 100 சதவீத டிக்கெட் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இந்த டிக்கெட் கவுண்ட்டர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மார்ச் 22-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம். ஏப்ரல் 1-ந்தேதி முதல் 14- ந்தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை வருகிற 12-ந்தேதியில் இருந்தும், ஏப்ரல் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை வருகிற 19-ந்தேதி முதல் திரும்ப பெற்றுகொள்ளலாம்.

மே மாதம் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை உள்ள டிக்கெட் கட்டணத்தைவருகிற 26-ந்தேதியில் இருந்தும், மே 16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை உள்ள டிக்கெட் கட்டணத்தை அடுத்த மாதம்(ஜூலை) 3-ந்தேதியில் இருந்தும், ஜூன் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை உள்ள டிக்கெட் கட்டணத்தை ஜூலை மாதம் 10-ந்தேதியில் இருந்தும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முககவசம் அணியாமல் வரும் நபர்கள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News