செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

துபாயில் இருந்து கோவை வந்த 180 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-06-03 12:47 GMT   |   Update On 2020-06-03 12:47 GMT
சிறப்பு விமானம் மூலம் துபாயில் இருந்து கோவை வந்த 180 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனாவால் 146 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கோவையை சேர்ந்த வாலிபர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 145 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக இருந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த மணமகன் உள்பட 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சென்னை, பெங்களூர், டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு விமானம் மற்றும் கார் மூலமாக ஏராளமானோர் வந்தனர். இவர்களில் டெல்லியில் இருந்து வந்த 65 வயது திருநங்கை, பெங்களூரை சேர்ந்த 24 வயது தங்க நகை வடிவமைப்பாளர் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் உடனடியாக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தற்போது கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 21 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவையில் நேற்று ஒரே நாளில் கொரோனா அறிகுறியுடன் 17 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 10 ஆண்கள், 7 பெண்கள். 13 பேர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், 4 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

வளைகுடா நாடான துபாயில் இருந்து நள்ளிரவு 12.10 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு சிறப்பு விமானம் வந்தது. இதில் 20 கர்ப்பிணிகள் உள்பட மொத்தம் 180 பேர் வந்தனர். இவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

பின்னர் 20 கர்ப்பிணிகள் மட்டும் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மீதமுள்ள 160 பேர் கோவையில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பரிசோதனை முடிவுகள் வந்ததும் தனிமை படுத்தப்பட்டவர்கள் 7 நாட்களுக்கு பின்னர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
Tags:    

Similar News