செய்திகள்
ரெயில்

திண்டுக்கல்லில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் மூலம் 620 பேர் பயணம்

Published On 2020-06-03 07:21 GMT   |   Update On 2020-06-03 07:21 GMT
திண்டுக்கல்லில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு இன்று சிறப்பு ரெயில் மூலம் 620 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு மில்கள், நூட்பாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவு பணிபுரிந்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள அவர்கள் சிறப்பு ரெயில் மூலம் அந்தந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் இருந்து முதலாவது சிறப்பு ரெயில் மூலம் 1600 பேர் பீகார் மாநிலத்துக்கும், 2-வது சிறப்பு ரெயில் மூலம் 696 பேரும், 3-வது சிறப்பு ரெயில் மூலம் 1600 பேர் பீகார் மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் 4-வது சிறப்பு ரெயில் மூலம் 1600 பேர் உத்திரபிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று 620 பேர் ஜார்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். திண்டுக்கல் முகாமில் தங்கி உள்ள 82 பேர், புதுக்கோட்டையை சேர்ந்த 48 பேர், அரியலூரை சேர்ந்த 31, நாமக்கல்லை சேர்ந்த 226, தஞ்சாவூரை சேர்ந்த 20, சேலத்தில் 36, திருச்சியில் 164, திருவாரூரில் 131 என மொத்தம் 620 பயணிகள் திண்டுக்கல்லில் இருந்து கிளம்பும் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இன்று மதியம் 3 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து கிளம்பும் ரெயில் வருகிற 5-ந் தேதி காலை 9 மணிக்கு ஜார்கண்ட் மாநிலத்தை சென்றடையும்.

முன்னதாக அந்தந்த முகாம்களில் தங்கி உள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் இன்று காலை முதல் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படுகிறது.

திண்டுக்கல்லில் இருந்து மட்டும் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News