செய்திகள்
கைது

ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பாமல் ரூ.78 லட்சம் கையாடல்

Published On 2020-06-03 06:43 GMT   |   Update On 2020-06-03 06:43 GMT
ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பாமல் ரூ.78 லட்சம் கையாடல் செய்தது தொடர்பாக ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென்நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காளிங்கன் (வயது 28), பிரசாந்த் (29). இவர்கள் திண்டிவனம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் பணியாளர்களாக புதுவையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக 2 பேரும் பணிக்கு வரவில்லை. திடீரென்று மாயமாகிய 2 பேரின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தனியார் நிறுவன அதிகாரிகள் திண்டிவனம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் முறையாக பணம் வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது 4 ஏ.டி.எம். மையங்களில் வைக்க வேண்டிய 78 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வைக்கப்படாமல் இருந்தது. விசாரணையில் காளிங்கன், பிரசாந்த் ஆகியோர் இந்த பணத்தை கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து தனியார் நிறுவன அதிகாரி அபிஜித் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த காளிங்கன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News