செய்திகள்
பூ மார்க்கெட்டை திறக்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்த வியாபாரிகள்

திண்டுக்கல்லில் பூ மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் மனு

Published On 2020-06-02 15:25 GMT   |   Update On 2020-06-02 15:25 GMT
திண்டுக்கல்லில் பூ மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் 127 பூக்கடைகள் உள்ளன. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக பூ மார்க்கெட் பூட்டி கிடக்கிறது. இதனால் பூ வியாபாரிகளும், பூ விவசாயிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் பூக்களை வைத்து விற்பனை செய்தனர். இதையடுத்து திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் பூ விற்பனை செய்வதற்காக தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பஸ்நிலையத்தில் பூக்களை வைத்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது பூ விவசாயிகள், வியாபாரிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

இதைத்தொடர்ந்து பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மூர்த்தி, பொருளாளர் சகாயம், துணை செயலாளர் இப்ராகிம்ஷா மற்றும் பூ வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து மூடிக்கிடக்கும் பூ மார்க்கெட்டை மீண்டும் திறக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அப்போது 2 மாதங்களாக பூ மார்க்கெட் மூடி கிடப்பதால், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பூ மார்க்கெட்டை திறந்து குறைந்த அளவில் கடைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News