செய்திகள்
அம்மா உணவகம்

கொடைக்கானல் அம்மா உணவகத்துக்கு தேவையான காய்கறிகளுக்காக ஆழ்துளை கிணறு

Published On 2020-06-02 11:23 GMT   |   Update On 2020-06-02 11:23 GMT
கொடைக்கானல் அம்மா உணவகத்துக்கு தேவைப்படும் காய்கறி விவசாயத்துக்காக ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் முக்கிய நகர் பகுதிகளான அண்ணா நகர், அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், செண்பகனூர், நாயுடுபுரம், தெரசா நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அப்போது இரண்டு மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் நிலையில் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சி சார்பில் வனத்துறை தங்கும் விடுதி எதிரில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

இந்த பகுதியில் வனத்துறை, மாவட்ட கலெக்டர் தங்கும் அரசு விடுதிகள் கட்டிடம் உள்ளது. மேலும் செயல்படாத நகராட்சி கழிவறை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க ஆழ்துளை கிணறு அமைக்காமல் அரசு கட்டிடங்களுக்கு அருகில் எதற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து கொடைக்கானல் நகராட்சி குடிநீர் துறை அதிகாரியிடம் கேட்ட போது, அம்மா உணவகத்தில் வருங்காலத்திற்கு காய்கறிகள் தேவைக்கு விவசாயம் செய்ய இருப்பதாகவும், விவசாயத்திற்கான தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்கு நகராட்சி சார்பில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகளின் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News