செய்திகள்
கைது

கோவையில் குடிபோதையில் தந்தையை குத்தி கொன்ற மகன்

Published On 2020-06-01 14:00 GMT   |   Update On 2020-06-01 14:00 GMT
கோவையில் குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் தொடர்பாக மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை:

கோவை செல்வபுரம் பனைமரத்தூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன்(வயது50). கட்டிடத் தொழிலாளி.

இவரது மகன் திவாகர்(25). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று தந்தையும், மகனும் வீட்டில் இருந்தனர். அப்போது 2 பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவர்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த திவாகர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை குத்தினார். இதில் அவருக்கு கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த முருகன் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த திவாகர் என்னசெய்வது என்று தெரியாமல் தவித்தார். மேலும் உறவினர்களிடம் தந்தை கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறினார்.

இதையடுத்து உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் உடலை அடக்கம் செய்வதற்கு கடைசி நிமிடத்திற்கு முன்பு உறவினர்கள் முருகனின் உடலில் காயம் இருப்பதை பார்த்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் மகன் திவாகரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்தி கொன்றுவிட்டதாகவும், வெளியில் தெரியாமல் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் திவாகரை கைது செய்தனர். மேலும் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News