செய்திகள்
கர்ப்பிணி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க மறுப்பு

Published On 2020-06-01 12:44 GMT   |   Update On 2020-06-01 12:44 GMT
புளியந்தோப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் அவரது தாய் தவித்து வருகிறார்.
ராயபுரம்:

புளியந்தோப்பு, கன்னிகாபுரம் புதிய காலனியில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண் கர்ப்பிணியாக உள்ளார். அவரது கணவர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் பிரிந்து கல்பாக்கத்தில் தனியாக உள்ளார்

கர்ப்பிணி பெண், தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சுகாதார ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

உடனடியாக அவர் புளியந்தோப்பில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த டாக்டர்கள் அவரை எழும்பூரில் உள்ள பெண்கள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து எழும்பூரில் உள்ள பெண்கள் நல ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணி பெண் சென்றபோது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்குமாறு கூறி அனுப்பி விட்டனர்.

இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற முடியாத கர்ப்பிணி பெண் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

இதுகுறித்து அந்த கர்ப்பிணி பெண் கூறும்போது, கடந்த 27-ந்தேதி எனக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்தனர். உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுமாறும் தெரிவித்தனர்.

நான் புளியந்தோப்பு ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, அங்கிருந்த டாக்டர்கள் எழும்பூரில் உள்ள பெண்கள் நல ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பி விட்டனர்.

எழும்பூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்குமாறு கூறிவிட்டனர். கடந்த 5 நாட்களாக நான் இவ்வாறு உள்ளேன். கொரோனாவுக்கு சிகிச்சை பெற முடியவில்லை’ என்றார்.

இதுதொடர்பாக கர்ப்பிணியின் தாய் தீபா கூறும்போது, நாங்கள் ஒரே அறையில் வசித்து வருகிறோம். எனது கணவர் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது மகனும் உடல் நலக்குறைவால் ஆபரே‌ஷன் செய்யப்பட்டு வீட்டில் உள்ளார்.

எனது மகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதை உறுதி செய்து இருக்கிறார்கள். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் எனது வீட்டு முன்பு தனிமைபடுத்தப்பட்ட வீடு என்று ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர்.

இதன் காரணமாக அருகில் வசிப்பவர்கள் உதவி செய்ய தயங்குகிறார்கள். நாங்கள் உதவி இன்றி தனிமையில் தவித்து வருகிறோம்’ என்றார்.

Tags:    

Similar News