செய்திகள்
வாழை இலை வியாபாரம் பாதிப்பு

கொரோனா ஊரடங்கு: வாழை இலை வியாபாரம் பாதிப்பு

Published On 2020-06-01 11:17 GMT   |   Update On 2020-06-01 11:17 GMT
கொரோனா ஊரடங்கால் திண்டுக்கல்லில் வாழை இலை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, பொன்மாந்துரை புதுப்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, தோட்டனூத்து, அரசனம்பட்டி, முள்ளிப்பாடி, தாமரைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி ஏராளமான ஏக்கரில் செய்யப்படுகிறது.

இங்கிருந்து வாழை இலைகளை வாங்கி வரும் வியாபாரிகள் திண்டுக்கல் எழில்நகர் பகுதியில் தரம் பிரித்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழை இலை வியாபாரமும் சரிவை சந்தித்துள்ளது. இது குறித்து வியாபாரி ஜெயசந்திரன் கூறுகையில், சித்திரை, வைகாசி மாதங்களில் அதிக அளவு முகூர்த்த நாட்கள் இருக்கும். இதனால் ஒரு கட்டு வாழை இலை ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும்.

ஆனால் தற்போது ஓட்டல் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் வாழை இலை விலை குறைந்துள்ளது. பொதுவாக ஓட்டல்களில் பார்சலுக்கு இலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் வாழை இலை தேவை குறைந்து விட்டது. ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு 250 பெரிய இலை கொண்ட கட்டு ரூ.700 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. சாப்பாட்டு இலை 400 கொண்ட கட்டு ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. ஆனால் தற்போது பெரிய இலை கட்டு ரூ.200 முதல் ரூ.500 வரையே விற்பனையாகிறது. சாப்பாடு இலை ரூ.500 முதல் ரூ.600 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இலை வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News