செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விமானம் மூலம் கோவை வந்த நீலகிரியை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேருக்கு கொரோனா

Published On 2020-06-01 10:06 GMT   |   Update On 2020-06-01 10:06 GMT
கோவைக்கு விமானத்தில் வந்த நீலகிரியை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோவை:

உள்நாட்டு விமான சேவை தொடங்கியதை தொடர்ந்து டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து கோவைக்கு பயணிகள் வருகின்றனர். இவர்களுக்கு கோவை விமானநிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து 5 விமானங்கள் கோவைக்கு இயக்கப்பட்டது. இதில் 450 பயணிகள் கோவை வந்தனர். கோவை விமான நிலையத்தில் வைத்து அவர்களின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோவையை சேர்ந்தவர்கள் மட்டும் கொரோனா கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் நீலகிரியை சேர்ந்த 2 பேர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், திருப்பூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 4 பேரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 4 பேரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தற்போது கோவையை சேர்ந்த 6 பேர், நீலகிரியை சேர்ந்த 2 பேர், திருப்பூரை சேர்ந்த ஒருவர், நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவைக்கு நேற்று 4 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் 415 பேர் கோவைக்கு வந்தனர். இவர்கள் அனைவருக்கும் கோவை விமான நிலையத்தில் வைத்து சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதில் 156 பேர் கோவையை சேர்ந்தவர்கள். இவர்கள் கொரோனா கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீதம் உள்ளவர்கள் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனை முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) தெரியும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News