செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா

Published On 2020-05-31 17:37 GMT   |   Update On 2020-05-31 17:37 GMT
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்காசி:

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நெல்லை மாவட்டத்திற்கு மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து வருகிறவர்களால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று மேலும் 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 4 பேர் மாராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து வந்தனர். 3 பேர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களில் 2 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 352 ஆக அதிகரித்து உள்ளது. இதில் நேற்று மட்டும் 31 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 179 பேர் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் தூத்துக்குடியை சேர்ந்தவர் சென்னையில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்ததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தென்திருப்பேரை, கோவங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்து உள்ளார். இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், காயல்பட்டினத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் நேற்று காயல்பட்டினத்தை சேர்ந்த 5 பேர், தென்திருப்பேரையை சேர்ந்த 6 பேர், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், கோவங்காட்டை சேர்ந்த ஒருவர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேர் உள்பட மொத்தம் 17 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. இதுவரை 216 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை 86 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த 3 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 
Tags:    

Similar News