செய்திகள்
வெட்டுக்கிளி

வெட்டுக்கிளிகளை பார்த்து அச்சப்பட தேவையில்லை- கலெக்டர் தகவல்

Published On 2020-05-31 08:06 GMT   |   Update On 2020-05-31 08:06 GMT
வெட்டுக்கிளிகளை பார்த்து அச்சப்பட தேவையில்லை என்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் கூறியுள்ளார்.

நாகர்கோவில்:

நீலகிரி, கிருஷ்ணகிரியை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் விவசாயிகள் மத்தியில் வெட்டுக்கிளிகள் பீதி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறி இருப்பதாவது:-

குமரி மாவட்டம் கண்ணனூர், முளவிளை கிராமத்தில், வெட்டுக்கிளிகள் பாதிப்பு காணப்படுவதாக தகவல்கள் பெறப்பட்டதை தொடர்ந்து வேளாண்மை விஞ்ஞானிகள், வேளாண் மைத்துறை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கொண்ட குழு, அப்பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இப்பகுதியில் காணப்படும் வெட்டுக்கிளிகள் சாதாரண காபி பயிரைத் தாக்கும் வெட்டுக்கிளி வகையை சார்ந்த வெட்டுக்கிளிகள் தான். இவற்றை கண்டு விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. இவை பாலைவன வெட்டுக்கிளி வகையை சேர்ந்தது அல்ல என தெரிவித்தனர்.

வெட்டுக்கிளிகளில் 28 ஆயிரத்து 500 வகைகள் உள்ளது. அவற்றில் 50 இனங்கள் மட்டுமே அதிக அளவு பயிர்களை தாக்கும் தன்மை கொண்டவை. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது காணப்படும் இந்த காபி பயிரை தாக்கும் வெட்டுக்கிளிகள் பாக்கு, வாழை, தென்னை, தேக்கு, மா போன்ற பயிர்களில் குறைந்த அளவே சேதத்தை ஏற்படுத்த கூடியவை. எளிய ஒருங்கிணைந்த முறைகள் மூலம் அவற்றை கட்டுப்படுத்தி விடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பருவநிலை மாற்றத்தால் சாதாரணமாக தென்படக் கூடிய இந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகளைப்போல நீண்ட தூரம் பறக்கக்கூடியவை அல்ல.

விவசாயிகள் களைகளை கட்டுப்படுத்த வேண்டும். தேவைப்படும் இடங்களில் மாலத்தியான் அல்லது குளோர்பைரிபாஸ் பயிர் பாதுகாப்பு மருந்தினை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது.

பயிர்களுக்கு பாதுகாப்பு மருந்து தெளிக்கும் போது களைகளுக்கும் சேர்த்து தோட்டத்தின் வெளிப்பக்கத்திலிருந்து உள் நோக்கி தெளிக்க வேண்டும். எனவே விவசாயிகள் இவ்வகை வெட்டுக்கிளிகள் குறித்து பீதியடைய தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News