செய்திகள்
கலெக்டர் கிரண்குராலா

மானிய விலையில் திறந்தவெளி கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2020-05-30 17:33 GMT   |   Update On 2020-05-30 17:33 GMT
மானிய விலையில் திறந்தவெளி கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:

நடப்பு ஆண்டில் தோட்டக்கலைத்துறை மூலம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசன கருவிகள் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்களின் மூலம் விவசாயிகளின் வயல்களில் அமைத்து தரப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 7 ஆயிரத்து 200 ஹெக்டேருக்கு நிதி இலக்காக ரூ.50 கோடியே 40 லட்சம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசன கருவிகள், தெளிப்பு நீர் பாசன கருவிகள், மழை தூவான்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சொட்டு நீரிலும் அதிக மகசூல் மற்றும் வருவாய் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. தோட்டக்கலைப்பயிர்களான மரவள்ளி, மஞ்சள், வாழை, காய்கறிகள், தர்பூசணி, அனைத்து வகை பழமரங்கள், மலர்கள் ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீர்பாசன கருவிகளை அமைத்து கொள்ளலாம்.

துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாதுகாப்பான பிர்க்காக்களில் ஆழ்துளை அல்லது திறந்த வெளி கிணறுகள் அமைப்பதற்கும், மின்மோட்டார், டீசல் என்ஜின் வாங்குவதற்கும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் பாசன நீரை எடுத்துச்செல்ல பி.வி.சி.பைப்புகள் வாங்க மற்றும் நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட 2 திட்டங்களிலும் மானியம் பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார்அட்டை நகல், வயல் வரைபடம், மண் மற்றும் நீர் மாதிரி அறிக்கைகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டங்கள் குறித்து கூடுதல் விவரங்களுக்கு விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News