செய்திகள்
தீ

போலீஸ் சூப்பிரண்டு முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Published On 2020-05-29 14:19 GMT   |   Update On 2020-05-29 14:19 GMT
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் நேற்று முன்தினம் காலை காரில் தனது அலுவலகத்துக்கு வந்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு போலீஸ் சூப்பிரண்டை நோக்கி ஓடி வந்து பாதுகாப்பு கொடுங்கள், எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்று அலறியபடியே முறையிட்டார்.

இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்த பாட்டிலை கைப்பற்றி, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் எதற்காக தீக்குளிக்க முயற்சி செய்தீர்கள் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி ராஜாஜி தெருவை சேர்ந்த மணியின் மனைவி சுமதி(வயது 39) என்பதும், அவர் தனது தம்பியான உடும்பியத்தை சேர்ந்த வெங்கேடசனுடன் வந்திருந்ததும் தெரியவந்தது.

மேலும், சுமதியின் தந்தை ராமருக்கும், உடும்பியத்தை சேர்ந்த பொன்னன் என்பவருக்கும் வயல்காட்டில் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் பொன்னன் குடும்பத்தினர், ராமரை கடந்த 25-ந்தேதி தாக்கியுள்ளனர். இதில் ராமர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்த சுமதியை பூலாம்பாடியில் கொண்டு சென்று விடுவதற்காக வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் இரவில் அழைத்து சென்றுள்ளார். கள்ளுப்பட்டி அருகே அவர்கள் சென்றபோது பொன்னன் தரப்பினர் அவர்களை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தியும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த சுமதி தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும், நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்பு தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து சுமதியை அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினார். போலீஸ் சூப்பிரண்டு முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News