செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

முதியவரை அழைத்து வந்த டிரைவருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-05-28 14:19 GMT   |   Update On 2020-05-28 14:19 GMT
கமுதி அருகே முதியவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த டிரைவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கமுதி:

கமுதி அருகே சுந்தராபுரத்திற்கு வந்த முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை அழைத்து வந்த 22 வயது வாலிபருக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கபட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை வரும்வரை வீட்டு காவலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். டிரைவராக பணியாற்றும் இந்த வாலிபர் இதுவரை 5 முறை சென்னைக்கு வாடகை வாகனத்தில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கமுதியில் இதுவரையில் திம்மநாதபுரத்தை சேர்ந்த 58 வயது முதியவர், கமுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரின் கர்ப்பிணி மனைவி, சுந்தராபுரத்தை சேர்ந்த முதியவர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சுந்தராபுரத்தில் சுகாதாரதுறையினர் அறிவுறுத்தலின்பேரில் கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநபர்கள் உள்ளே செல்லவும், சுந்தராபுரம் மக்கள் வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணமானவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தற்போது ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 16 பேரும், பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 12 பேரும் என 28 பேர் மட்டுமே தற்போது தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News