செய்திகள்
மீட்பு

திருவள்ளூர் வழியாக மேற்குவங்கத்துக்கு லாரியில் சென்ற 80 பேர் மீட்பு

Published On 2020-05-28 12:46 GMT   |   Update On 2020-05-28 12:46 GMT
சேலத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக மேற்குவங்கத்துக்கு லாரியில் சென்ற 80 பேரை மீட்ட போலீசார், மருத்துவ பரிசோதனை செய்தபின் ரெயிலில் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர்.
திருவள்ளூர்:

ஊரடங்கால் தமிழகத்தில் சிக்கி உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் பல இடங்களில் தொழிலாளர்கள் கால்நடையாகவும், லாரி உள்ளிட்ட வாகனங்களிலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி இடம் பெயர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தினர் மேற்கு வங்கத்திற்கு லாரி மூலம் திருவள்ளூர் வழியாக சென்றனர். மணவாளநகர் அடுத்த அரண்வாயல் பகுதியில் வட்டாட்சியர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், கண்ணையன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது லாரியில் மொத்தம் 81 பேர் இருந்தனர். சமூக இடைவெளி உள்ளிட்ட எந்த பாதுகாப்பும் இல்லாமல் அவர்கள் பயணம் செய்து வந்தது தெரிந்தது.

அவர்களை மீட்டு மணவாள நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிகாரிகள் தங்க வைத்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் கூறும்போது, ‘அரசு கொடுக்கும் அத்தியாவசிய பொருட்கள் குறைவாக இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் இங்கு வேலை இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். எனவே சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து எங்கள் மாநிலத்தில் இருந்து லாரியை வரவழைத்து இருந்தோம்’ என்றனர்.

அவர்களிடம் அதிகாரிகள் கூறும்போது, திருவள்ளூரில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு செல்லும் ரெயிலில் மருத்துவ பரிசோதனை செய்தபின் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News