செய்திகள்
வீடுகள்

ஊரடங்கால் வேலையின்றி தவிப்பு- வீடுகளின் வாடகையை தள்ளுபடி செய்த மளிகைக்கடைக்காரர்

Published On 2020-05-28 11:00 GMT   |   Update On 2020-05-28 11:00 GMT
கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவித்து வருவதால் 14 வீடுகளின் வாடகையை திருச்சி மளிகைக்கடைக்காரர் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு அரிசி, உணவு பொருட்களையும் வழங்கி உள்ளார்.
திருச்சி:

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்கள் முடங்கி தினக்கூலிகள், நடுத்தர குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர்.

குறிப்பாக வாடகை வீட் டில் வசித்து வந்தவர்கள் வாடகையை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் நலன் கருதி வாடகை வசூலிக்க வேண்டாம் என்று வீட்டு உரிமையாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் சில இடங்களில் வாடகை கொடுக்க முடியாமல் தவித்த தொழிலாளர்கள் குடும்பங்களை வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றிய சம்பவங்களும் நிகழ்ந்தது.

அதே நேரம் சில இடங்களில் வாடகையை வாங்காமல் வீட்டு உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவு கரமும் நீட்டினர். அதில் திருச்சியை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் முருகனும் ஒருவர்.

திருச்சி துவாக்குடி மலை, அண்ணா வளைவு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகன், அதில் கிடைக்கும் வருமானத்தை சிறுக சிறுக சேமித்து, கடன் பெற்று அதே பகுதியில் 14 வீடுகளை கட்டியுள்ளார். அதனை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானம் மூலம் கடன் தொகையை செலுத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தன்னுடைய வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் படும் சிரமத்தை குறைக்கும் வகையில், 14 வீடுகளில் குடியிருக்கும் குடும்பத்தினரிடம் இருந்து ஒரு மாத வாடகையை (தலா ரூ.3000) தள்ளுபடி செய்துள்ளார்.

இதுபற்றி முருகன் கூறுகையில், எனது வீடுகளில் குடியிருப்பவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதால் அவர்களுக்கு மேலும் கஷ்டம் தரக்கூடாது என்பதற்காக வாடகை வசூலிக்கவில்லை.

ஊரடங்கு காலத்தில் வருமானத்தை கருத்தில் கொள்வதை விட தன்வீட்டில் குடியிருப்பவர்களின் நிலைமையை எண்ணியதே வாடகையை தள்ளுபடி செய்வதற்கு காரணம். வீட்டு வாடகை மூலமே வங்கிகளில் பெற்ற கடன் தொகையை செலுத்தி வந்ததாகவும், தற்போது சேமிப்பில் இருக்கும் பணத்தை பயன்படுத்தி வங்கி கடன் செலுத்துவதாகவும் கூறுகிறார்.

அவரது வீடுகளில் குடியிருப்பவர்கள் கூறுகையில், ஒரு மாத வாடகை வேண்டாம் என்று கூறியது இந்த ஊரடங்கு காலத்தில் மிகப் பெரிய வி‌ஷயம். முருகன் தள்ளுபடி செய்த வாடகையை பயன்படுத்தியே தங்களது குடும்ப தேவையை பூர்த்தி செய்கிறோம் என்றனர்.

ஊரடங்கு காலத்தில் மக்களின் நிலையை அறியாமல் அத்தியாவசிய பொருட்களை கூட விலை உயர்த்தி விற்று கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் தன்னுடைய 14 வீடுகளில் குடியிருப்பவர்களின் வீட்டு வாடகையை தள்ளுபடி செய்ததோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளார் முருகன். அவரது மனித நேயமிக்க செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News